பாரதியாரின் ஆத்திசூடி

06/01/2010 at 7:55 பிப (தமிழ்) (, , )

பாரதி ஒரு மகாகவி என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கவே முடியாது. “குயில்பாட்டு”, “பாஞ்சாலி சபதம்” போன்ற அவருடைய காவியப் படைப்புகளில் மட்டுமன்றி, கேட்போர் நெஞ்சில் கிளர்ச்சி உண்டாக்கும் அவருடைய விடுதலை பாடல்களில் மட்டுமன்றி, பக்திப் பரவசத்தோடு அவர் பாடிய காளி,கண்ணன் பாடல்களில் மட்டுமன்றி, குழந்தைகளுக்காக அவர் எழுதிய எளிய பாடல்களில் கூட அவருடைய கவித்துவமும் மகத்துவமும் வெளிப்படும் அதிசயத்தை வியக்காமல் இருக்க முடியாது. அவர் படைப்பு ஒவ்வொன்றும் பறைசாற்றும் தனிச்சிறப்பை மறுப்பதற்கில்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அவ்வை எழுதிய ஆத்திசூடி வரிகளைப் படித்துத்தான் தமிழ்நாட்டுக் குழந்தைகள் வளர்ந்தனர். திடீரென்று “புதிய ஆத்திசூடி” எழுத வேண்டும் என்று பாரதிக்கு ஏன் தோன்றியது? இந்த கேள்விக்கான விடையும் அவருடைய புதிய ஆத்திசூடியிலேயே உள்ளது.

“வேதம் புதுமைசெய்” என்பது புதிய ஆத்திசூடியின் 108 ஆவது வரி. அவ்வையின் படைப்புகளைத் தமிழ் வேதமாகவே மதித்த பாரதி அதைப் புதுமை செய்யத் துணிந்ததற்குக் காரணம், வேதமே ஆனாலும் கால மாற்றங்களுக்கு ஏற்பப் புதுப்பிக்கப் படவேண்டும் என்ற எண்ணமே.

பாரதியின் “புதிய ஆத்திசூடி” குழந்தைகள் மட்டு மன்றிக் கற்றறிந்த பெருமக்களும் படித்து, ரசித்துப் பயனடைய வேண்டிய ஒரு மகத்தான படைப்பு.

அ வரிசை”
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண் மிகவிரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை
“க வரிசை
கற்றது ஒழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித்தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல்கை கொண்டு வாழ்
கௌவியதை விடேல்
“ச வரிசை”
சரித்திரம் தேர்ச்சிகொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்
சைகையில் பொருள் உணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடம்தனை இகழ்
சௌரியம் தவறேல்
“ஞ வரிசை”
ஞமலி போல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிறு என இன்புறு
ஞேகிழ்வது அருளின்
ஞேயம் காத்தல் செய்

“த வரிசை”
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்று உணர்
தேசத்தை காத்தல் செய்
தையலை உயர்வுசெய்
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியில் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
“ந வரிசை
நன்று கருது
நாளெல்லாம் வினைசெய்
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்ப்பது கைவிடேல்
“ப வரிசை”
பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிது கேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்மை இகழ்
போர்த்தொழில் பழகு
“ம வரிசை”
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங் கொடேல்
மெல்ல தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்முறத் தவம்செய்
மோனம் போற்று
மௌட்டியந்தனைக் கொல்
“ய வரிசை”
யவனர் போல் முயற்சி கொள்
யாரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
“ர வரிசை
ரஸத்திலே தேர்ச்சி கொள்
ராஜஸம் பயில்
ரீதி தவறேல்
ருசி பல வென்றுணர்
ரூபம் செம்மை செய்
ரேகையில் கனி கொள்
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு
“ல வரிசை”
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சி செய்
லீலை இவ்வுலகு
உலுத்தரை இகழ்
உலோக நூல் கற்றுணர்
லௌகிகம் ஆற்று
“வ வரிசை”
வருவதை மகிழ்ந்துண்
வானநூல் பயிற்சி கொள்
விதையினைத் தேர்ந்தெடு
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமைசெய்
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்