பெண் – யாரோ எழுதிய கவிதை
ஒன்பது மாத கருவறை கதகதப்பு, முதல் அழுகை,
காற்றில் சுற்றுகையில் குடையாகும் பாவாடை,
கெண்டை கால்களுடன் சண்டை போடும் கொலுசுகள்,
இறுகப் பின்னிய ரெட்டை ஜடை,
புரியாமல் பூரிக்கும் முதல் ரத்தம்,
கண்ணாடி முன் நிற்கும் கர்வ நிமிடங்கள்,
கன்னத்து ரெட்டக்குழிகளின் வெட்கம்,
மார்புடன் அணைத்து போகும் புத்தகங்கள்,
பயத்தில் பிரசவிக்கும் உதட்டு வியர்வை,
தேக வாசனையுடன் சின்ன கைக்குட்டை,
சோகத் துணையாய் ஈரத் தலையணை,
வெட்கத்தில் விரல்விடும் முதல் ஸ்பரிசம்,
அழுகையில் அரவணைக்கும் ஆண்மை,
உயிர் பிளந்து உடையும் பனிக்குடம்,
சுரந்து போகும் தாய்மை துளி,
அம்மா என்ற அழைப்பின் வருடல்,
அத்தனையும் அனுபவிக்க
அடுத்த பிறவியிலாவது பிறக்க வேண்டும்
கள்ளிச்செடிகள் இல்லாத தேசம் ஒன்றில்.
விளங்காத விடியல்
எழுத்தாணிக்கு கவலையில்லை!!!
இடைமறிக்கும் உன் நினைவுகளையே
எழுதச் சொல்லி துடிக்கிறது…..தாங்குவேன் நானென்று
வெறும் தவிப்புகளையே
பரிசளிக்கிறாய்…..
ஈரம் கொண்ட
இளஞ்சிவப்பு இதழ்கள்
இரக்கமில்லாத உன் கைகள்
இட்ட வேலியில்
உன் இதயத்துக்கு பக்கத்தில் நான்….
இரவுகளை இழக்க மனமின்றி
இனியவன் துணையின்றி
இம்மியளவும் வாழ்வில் சுவையின்றி
விரகமென்று நிற்கும் போது
விழித்திரை வேர்க்கும் முன்னே
விரதத்தை முடிக்கிறாய்!!!
தூங்காத மனமோ தூயவன்
உனையெண்ணி துடிக்க…
அர்த்த ராத்திரி அனைத்தும்
அமைதி காக்கிறது..
நீ ஆலிங்கனம்
செய்யவேண்டி…
நினைவுகளின் ஈரம்
சுவாசத்தில் காய மறுக்க
அணைக்கும் ஆவேசத்தில்
அர்த்த ஜாமமோ அடுத்த
பொழுதை தர வெறுக்கிறது…
மனதில் காதலோடு
மரத்து போன உடலோடு
வெறுத்து போகுதடா காதல்
கறுத்த இரவும் விடியல் கண்டு….
வெளுத்து விடிகிறதடா?
வேதனையில் துடித்து
விழிக்கிறதடா!!!!!!